மதுரை: தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 8) நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை ஆணையரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் பேசுகையில், “தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்ட சாதி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை. பட்டியிலிடப்பட்ட பழங்குடியினர் சான்று வழங்குவதில் தான் சிக்கல் உள்ளது. அதை உட்கோட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளின் அறிக்கைகளை பெற்றுதான் வழங்கும் நிலை உள்ளது.
பழங்குடியினர்களில் பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கலாம் என்பது குறித்து விரைவில் சுற்றறிக்கை அளிக்கவுள்ளோம். மேலும், சாதி சான்றிதழ் வழங்கும்போது சந்தேகம் இருக்கும்பட்சத்தில் விசாரணையால் ஏற்படும் காலதாமத்தை குறைக்க ஆணையம் மாற்று திட்டத்தை அரசுக்கு பரிந்துரைக்கும்.