மதுரை: பெருங்குடியைச் சேர்ந்த முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரிய பிரகாஷ் என்பவர் தங்கள் ஊரில் பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாகக் கூறிய தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் , முனைவர் இலட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள் சாமி ஆகியோர் கொண்ட குழு கள ஆய்வு செய்தனர்.
ஆலமரத்து விநாயகர் கோவில் அருகே அவர்கள் ஆய்வு செய்தபோது குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டினைப் படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி ஆகியோர் கூறிய தகவலின்படி வேளாண்மை, மண்பாண்டம் தொழிலில் சிறப்புடன் வாழ்ந்த பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோவில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்ட கல் தூணில் எட்டுக் கோணம், இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.
கோட்டோவியம்
தூணின் மேல் பகுதி பட்டையில் மூன்று பக்கம் நில அளவை குறியீடுகள் ,மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. கோட்டோவியம் நிலத்தை வைணவக் கோவிலுக்கு நிலக்கொடையாகக் கொடுத்ததை சுட்டிக்காட்டுகிறது.