நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா குறித்து நடிகர் அபி சரவணன் உருக்கமான பதிவை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ’தூள்’ படம் மூலம் பிரபலமான இவர், இதுவரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, அவதிப்பட்டு வந்த இவர், இன்று(மார்ச் 29) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து நடிகர் அபி சரவணன் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று (மார்ச் 29) அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது.
இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.
உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துப்போனேன், உடைந்து போனேன். அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .
இறுதி அஞ்சலி செலுத்தும் அபிசரவணன் ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியை பார்க்க சென்றேன்.
சென்ற வழி எல்லாம் நினைவுகள்... அபி அபி என்று அழைத்த அந்த ஆறுதலான வார்த்தைகள். அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.
இறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது. கண்ணீருடன் பேரன் அபி சரவணன்" என்று பதிவிட்டுள்ளார்.