தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கஷ்டத்திலும் காளைகளை காக்கும் காளையன்' - ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கான உத்வேகம் - madurai traditional

ஜல்லிக்கட்டு காளைகளையும் நாட்டு மாட்டினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை இழந்த பின்னரும் கூட போராடி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் வீரபாண்டி.

By

Published : May 26, 2021, 7:11 PM IST

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்திய நம் இளம் தலைமுறைகளுக்கு மத்தியில், ஜல்லிக்கட்டு காளைகளையும் நாட்டு மாட்டு இனங்களையும் காப்பதற்காக தன் வருமானத்தையும் தொழிலையும் இழந்து இன்றைக்கும் அவற்றிற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த வீரபாண்டி.

நொடித்துப் போன தொழில்.. துடித்துப் போன வீரபாண்டி..

மதுரை அலங்காநல்லூர் சாலையில் சிக்கந்தர் சாவடி அருகே உள்ளது வாசன் நகர். இங்கு மணல் மற்றும் சரக்கு லாரிகள் பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வைத்து தொழில் செய்துகொண்டிருந்த நபர்தான் இந்தத் தொகுப்பின் நாயகர் வீரபாண்டி. தன் குடும்பம் தலைமுறை தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்த ஆர்வம் இவரிடமும் இருந்தது.

ஜல்லிக்கட்டு காளைகளைக் காக்க தான் வசதியிழந்த பின்னரும் போராடும் தொழிலதிபர் - வேதனை கதையின் தொகுப்பு

தன்னுடைய லாரி புக்கிங் தொழிலின் இடையே, ஜல்லிக்கட்டு காளைகளையும் நாட்டு மாட்டு இனங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவற்றை கவனம் கொடுத்து வளர்க்க தொடங்கினார். தற்போது அவரிடம் 17 ஜல்லிக்கட்டு காளைகளும் 13 பசுக்களும் 4 கன்று குட்டிகளும் பராமரிப்பில் உள்ளன. தனது நேரடியான முழுநேர கண்காணிப்பின் மூலமாக லாரி புக்கிங் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் ஒரு கட்டத்திற்குப் பிறகு மிகவும் நொடித்துப் போனது. அதற்கு சாட்சியாய் இவரது வீட்டின் முன்பாக இரண்டு லாரிகள் மண்ணில் புதைந்து பழுதடைந்த நிலையில் காணப்படுவது கண்கூடு.

காளைகள் என்றால் அவர் குடும்பத்திற்கே உயிர்..

ஈ டிவி பாரத் செய்திகளுக்காக அவரை சந்தித்து பேசினோம். அப்போது பேசிய வீரபாண்டி, "ஜல்லிக்கட்டு காளைகள் மீதும் நாட்டு மாடுகள் மீதும் எனக்கு அளவற்ற பிரியம் உண்டு. ஆகையால் கவனம் செலுத்தி அவற்றையெல்லாம் நானே நேரடியாக பராமரித்து வருகிறேன். இதன்காரணமாக என் வீட்டு உறவினர்களிடம் கூட எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது.

முடங்கிப் போன லாரி புக்கிங் தொழில்

என் குடும்பத்தில் ஒருவரைப் போன்று பழகிவிட்ட இந்த ஜீவன்களை என்னால் விட்டு பிரிந்து இருக்க ஒருகணமும் முடியவில்லை. தற்போது தொழிலை முழுவதுமாக இழந்து வருமானத்திற்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். இந்த உயிரினங்களுக்கு உணவு அளிப்பதற்காக ஜெர்சி பசுக்கள் மூலமாக பால் கறந்து விற்பனை செய்தும்கூட சமாளிக்க முடியாத நிலைமைக்கு வந்துவிட்டேன் " என்கிறார்.

வீரபாண்டியைத் தடவிக் கொடுக்கும் காளை
தவிடு, பிண்ணாக்கு, வைக்கோல், தண்ணீர் என்று அனைத்தையும் தானே நேரடியாக தன் மனைவி உதவியோடு ஒவ்வொரு மாட்டுக்கும வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். காளைகளின் பெயரைச் சொல்லி அழைக்கும் போதே அவை பூனைக்குட்டி போல் வீரபாண்டியிடம் பம்முகின்றன. ஆனால் வெளியாட்களை கண்டால் சீரும் சீற்றம் நமக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

வெளி மாவட்டங்களிலிருந்து உதவிக்கரம்:

கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீரபாண்டி வாழ்க்கையில் மட்டுமன்றி அவர் வளர்ந்து வருகின்ற காளைகள் பசுக்களின் வாழ்விலும் விளையாடி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

'ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீரத் திருநங்கை நான்' - பெருமையுடன் பூரிக்கும் சிந்தாமணி

வீரபாண்டி மேலும் கூறுகையில், "என் நலன் மீது அக்கறை கொண்ட சில நண்பர்கள் இந்த காளைகளை விற்றுவிட எனக்கு அறிவுறுத்துகிறார்கள். சராசரியாக வைத்துக் கொண்டாலும் ஒரு மாட்டிற்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். என் உறவுகள் போல் வளர்ந்த இந்த காளைகளை விற்க எனக்கு ஒரு போதும் மனம் வரவில்லை. காரணம் என்னை விட்டு சென்றாலோ அல்லது என்னை பார்க்காவிட்டாலோ இந்த பசுக்களும் காளைகளும் ஒருபோதும் உணவு அருந்தாது. வீம்பாக பட்டினி கிடக்கும். அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்கிறார்.

காளைகளின் மீதான வீரபாண்டியின் அன்பு அளப்பெரியது
தொழில் நலிந்து வருமானம் இழந்துவிட்ட சூழலிலும் அவற்றை பராமரிப்பதில் கொஞ்சமும் சுணக்கம் காட்டவில்லை. நல்ல சத்தான உணவாக கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. சில நல்ல நண்பர்களின் உதவியோடு தீவனம் வைக்கோல் போன்ற உதவிகள் அவ்வப்போது கிடைக்கின்றன. ஆனாலும் அதைக் கொண்டு இந்த உயிரினங்களின் பசியை ஓரளவிற்குத் தான் பார்க்க முடிகிறது என்கிறார் வேதனையோடு.

தமிழ்ச் சமூகத்தின் பெரும் கடமை

இந்த காளைகளை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ் கூறுகையில், ஜல்லிக்கட்டு காளைகள் மீதுமா பசுக்கள் மீதும் இத்தனை ஆர்வம் கொண்ட ஒரு மனிதர் இருக்க முடியுமா? என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது. லாரி தொழிலில் மிக வசதியாக வாழ்ந்து வந்தவர் தற்போது காளைகளுக்காகவே நொடித்து விட்டார். எனது வீட்டிற்கு அருகிலேயே இருக்கின்ற காரணத்தால் நான் உடனடியாக இடது காளைகளுக்கு எதுவென்றாலும் வந்து பார்த்து விடுவேன். வீரபாண்டி போன்ற நபர்களால் இன்றும் பண்பாடு உயிர்ப்புடன் திகழ்கிறது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை உரிமையாளர்கள் வீரர்கள் வீரபாண்டி போன்ற நபர்களுக்கு இந்த நேரத்தில் பேருதவி புரிய வேண்டும்" என்கிறார்.

வீரபாண்டியின் பேச்சிற்கு தலை அசைக்கும் காரிக் காளை
வீரபாண்டி போன்ற காளை ஆர்வலர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் அவர் வளர்க்கும் காளைகளுக்கு உணவளித்து காப்பாற்றுவது தமிழ்ச் சமூகத்தின் பெரும் கடமை. மேலும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இளைஞர் வீரபாண்டி விஷயத்தில் தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் முக ஸ்டாலினும் தலையிட்டு அவர் வளர்த்து வரும் காளைகளையும் பசுக்களையும் காப்பாற்றி வீரபாண்டியன் முயற்சிகளுக்கு உறுதுணை சேர்க்க வேண்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம்.

இதையும் படிங்க: படித்தது இளங்கலை! பிடித்தது இளங்காளை!

ABOUT THE AUTHOR

...view details