மதுரை பூ சந்தையில் மல்லியின் விலை கிலோ 2,300 ஆக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலை ஓரிரு நாட்கள் தொடரும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
குறிப்பாக மதுரை மல்லி நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் விற்பனையாகும். அதுமட்டுமன்றி மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய மார்கெட் உள்ளது. மதுரை விமான நிலையம் வழியாக நாள்தோறும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.