கரோனா வைரஸ் தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், அந்தந்த மாநிலங்களிலுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை அனுப்புவதற்கு மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று தனி உதவி மையம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாகப் பிற மாநிலங்களைச் சேர்ந்த, தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 64 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நேற்று இரண்டாம் கட்டமாக 13 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் இன்று பேருந்து மூலம் சென்னைக்கு காலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையிலிருந்து ரயில் மூலம் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவர்.
அனுப்பப்பட்ட மேகாலயா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள உதவி மையத்தில் ஆன்லைன் மூலமாக, மேலும் நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்துள்ளதால், அடுத்த சில நாட்களில் அவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்படுவர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
மும்பையில் இருந்து மதுரை வந்த 73 பேருக்குப் பரிசோதனை!