தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிபி 8ஆம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு! - vishnu idol found in madurai

மதுரை: பெரிய உலகாணி எனும் கிராமத்தில், கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால விஷ்ணு சிலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

8th century vishnu idol found in madurai
8th century vishnu idol found in madurai

By

Published : Sep 14, 2020, 4:57 PM IST

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், பெரிய உலகாணி எனும் கிராமத்தின் வழியாகப் பாயும் குண்டாற்றின் மேற்கரையில், கிபி 8ஆம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலுாரிலுள்ள மதுரை, காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி, இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன், துறைப் பேரராசிரியா் சங்கையா ஆகியோர் கொடுத்தத் தகவலின்படியும் இக்கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை குறித்த ஆய்வினை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மருது பாண்டியன், இளம் ஆய்வாளா் உதயகுமார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இச்சிலை, கிபி 8ஆம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து காப்பாட்சியர் மருது பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்கள் போன்றவற்றால் கணிக்கப்பட்டது. மேலும், குறிப்பாக முப்புரிநுாலானது வலது கைக்கு மேலாக செல்வது உற்றுநோக்கத்தக்கது. இது போன்று பல சிலைகள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உதாரணமாக திருமலாபுரம், திருப்பரங்குன்றம், செவல்பட்டி போன்ற இடங்களில் இதே போன்ற சிற்ப அமைப்புடன் கூடிய கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லவா் காலத்திலும் இதே போன்று வலது கைக்கு மேலாக முப்புரிநுால் செல்லும் அமைப்புடன்கூடிய கற்சிற்பங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மதுரை மாவட்டக் கல்வெட்டுத் தொகுதியில் இவ்வூர் தொடா்பான கல்வெட்டு ஒன்று வெளிவந்துள்ளது. இவற்றின் மூலம் இவ்வூரின் பழைய பெயா் குலசேகராதிப சதுா்வேதிமங்கலம் என்றும் உலகுணிமங்கலம் என்றும் அறியப்படுகிறது. மேலும், இவ்வூரானது கிபி 8ஆம் நுாற்றாண்டு முதற்கொண்டு சிறப்பு பெற்று விளங்குகிறது என்பதும் தெரியவருகிறது. இவ்வூர் பிராமணா்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேய கிராமமாகும்.

கி.பி. 13ஆம் நுாற்றாண்டில் வெளியிடப்பட்ட பாண்டியா் கால கல்வெட்டின்படி இவ்வூரிலிருந்த கிராமசபையார் பாசிபாட்ட வரி (மீன்பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் குளங்களைக் குழிவெட்டி பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி சொல்லப்படுகிறது. இக்கல்வெட்டானது தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது தொடா்பான கல்வெட்டு ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details