தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழ்நாடு கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கான கருத்துக்கணிப்பில் 87.1% பேர், நீட் தேர்வு வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

87.1 percentage of peoples oppose NEET exam reported in the poll
87.1 percentage of peoples oppose NEET exam reported in the poll

By

Published : Jul 17, 2021, 4:07 PM IST

மதுரை: கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா என்ற கருத்துக் கணிப்பு இணைய வழியாக கடந்த ஜூன் 28ஆம் நாள் தொடங்கி ஜூலை 14ஆம் நாள் வரை நடத்தப்பட்டது.

இக்கருத்துக் கணிப்பில் 42 ஆயிரத்து 834 பேர் பங்கேற்றனர். இன்று அக்கருத்துக்கணிப்பின் முடிவை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வெளியிட்டார். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அதனைப் பெற்றுக் கொண்டார். இக்கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 87.1% பேர் நீட் தேர்வை விரும்பவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வை விரும்புகிறீர்களா?

ஆதரவு 11.9% - எதிர்ப்பு 87.1%

நீட் தேர்வுக்கு ஆதரவாக 11.9% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வினால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படுவதாக 90.5% பேரும், இந்தத் தேர்வு மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக 86.9% பேரும், நாடு முழுவதும் இதுபோன்ற ஒரே தேர்வு முறை தேவையில்லை என 67% பேரும், இதனால் இட ஒதுக்கீடு முறை பாதிப்பிற்குள்ளாகும் என 83.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று 89.7% பேரும், நீட் தேர்வு மாநில உரிமைகள் மற்றும் நலனில் தலையிடுகிறது என 79.6% பேரும், அதேபோன்று நீட் தேர்வை எழுதுபவர்களில் பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்வு பெற முடியும் என்ற கருத்தை 60.6% பேரும் தங்களது கருத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

யாருக்கெல்லாம் மருத்துவக் கல்லூரியில் இடம்?

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு

அதேபோன்று நீட் தேர்வின் மூலமாக திறமையானவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்று ஆறாயிரத்து 594 பேரும், பணம் படைத்தவர்களுக்கு கிடைக்கிறது என்று 25 ஆயிரத்து 969 பேரும் தனிப்பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது என்று 22 ஆயிரத்து 725 பேரும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்று 23 ஆயிரத்து 461 பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு முற்றிலும் விலக்குப் பெறும் என 75.8% பேர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் தீர்மானத்தில், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் நீட் தேர்வு எதிரானது. மேலும் மாணாக்கரின் மருத்துவக் கல்வி வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் போக்கை பெருவாரியான தமிழ்நாடு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

நீட், தற்கொலைக்கு வழி வகுக்கிறதா?

மருத்துவக் கனவு சிதைவு

நீட் தகுதித்தேர்வு உயர்கல்வி பயிலும் வாய்ப்பில் பெறும் பாகுபாட்டையும் ஏற்றத் தாழ்வையும் உருவாக்கிவருகின்றது என்பதை மக்கள் கருத்துக் கணிப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். மாணவர்களுக்குப் பெரும் மன உளைச்சலை உருவாக்குகிறது.

அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையைக் குலைத்துச் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கச் செய்கிறது. அவர்களின் உயர்கல்வி கனவைச் சிதைக்கின்றது. கூடுதலாக அவர்களின் உடல்நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடுகிறதா?

நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளில் இரு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பள்ளி கட்டணத்தோடு நீட் பயிற்சிக்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு பள்ளிக்கல்வி முறையை பயிற்சி மைய முறையாக மாற்றி பள்ளிக்கல்வியை வணிகமயமாக்கியுள்ளது.

நீட் விலக்கு - நிச்சயம்

மேலும் இட ஒதுக்கீட்டு முறை நீட் தேர்வினால் ஆபத்துக்குள்ளாகி உள்ளது. கற்றல் வாய்ப்பில் மிகப்பெரிய இடைவெளி அதிகரித்துள்ளது. இது மாணவர்களிடையே பாகுபாட்டினை உருவாக்கியுள்ளது.

நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டே தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்குப் பெற வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மற்ற மாநில அரசுகள் ஒத்துழைப்போடு இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு - நம்புகிறீர்களா

நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மாணவர் நலன் சார்ந்து நீதியான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கண. குறிஞ்சி, வழக்கறிஞர் எம்.ஏ. பிரிட்டோ, கா. கணேசன் ஆகியோர் இந்தக் கருத்துக்கணிப்பினை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

ABOUT THE AUTHOR

...view details