மதுரை:கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரனின் சிற்பம் ஒன்று ஆய்வாளர்களால் மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்னமநல்லூரை சேர்ந்த க.சிவன் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், மணிகண்டன், தர்மர், வைகிராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
சங்க காலம் முதல் இன்றுவரை
இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, ’சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு போரில் இறந்தவர்களின் நினைவாகவும் , வீரம் பேசும் நினைவுக்கல்லாகவும் உள்ளது.
பெருநிரை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவுக் கல்லாகும். அதன்படி தென்னமநல்லூரில் கண்டறியப்பட்ட வில் வீரன் நடுகல் சிற்பம் 4 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமனும் கொண்ட கருங்கல்லாலான தனி பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.