இதுகுறித்து, மதுரை ரயில்வே கோட்டம் நேற்று(ஏப்ரல்.02) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து விரைவு ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு பயணச் சீட்டுகள் முழுவதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் பயணிகளுக்கு இயல்பாக கிடைக்கவேண்டிய முன்பதிவு பயணச் சீட்டுகளை அதிக அளவில் பதிவு செய்து முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே இதை தடுக்க கடந்த மார்ச் மாதம் முழுவதும் மதுரை கோட்டத்தில் பல்வேறு தனியார் நடத்தும் பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அங்கீகாரம் இல்லாத தனிநபர்கள் அதிக அளவில் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதும் கண்காணிக்கப்பட்டது.
இதில் 33 இடைத்தரகர்கள் 2 அங்கீகாரம் பெற்ற முகவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூபாய் 4,41,686 மதிப்புள்ள 444 முன்பதிவு ரயில் பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதள பயனாளர் பதிவிலிருந்த அவர்களது 151 மின்னஞ்சல் முகவரிகள் தடை செய்யப்பட்டுள்ளன.