மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 5ஆவது கட்ட ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரல் நுனி அளவிலான பன்றி முத்திரை பதித்த பவளமணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கார்லீனியன் எனப்படும் சூது பவள மணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பன்றி முத்திரையானது, ஐந்தாம் கட்ட ஆய்வின் மிகச்சிறப்பான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
கீழடியில் 2,000 ஆண்டுகள் பழமையான பன்றி முத்திரை பவளமணி! - 2000 years back Coral
மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான பன்றி முத்திரை பதித்த பவளமணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூது பவள மணியின் மேற்பகுதி சிவப்பாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கிறது. இந்த சிவந்த பகுதியின் உள்ளே காட்டுப் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய அளவிலான இந்த சூது பவள மணியின் உள்ளே மிக நுட்பமாக வரையப்பட்ட காட்டுப் பன்றியின் உருவம் ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி மூதாதையர்கள் தாழி எனப்படும் பெரிய அளவிலான பானை போலவே ஒரு சென்டிமீட்டர் அளவில் உருவாக்கியதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற தொல்லியல் சின்னங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மினியேச்சர் வடிவிலான முதுமக்கள் தாழியும், மில்லி மீட்டர் அளவிலான பன்றி முத்திரையும் மிகுந்த கவனத்திற்குரிய ஒன்றாகும் என்றனர்.