மதுரை: மதுரை மாவட்டம் கருமாத்தூருக்கு அருகேயுள்ள குக்கிராமம் கரிசல்பட்டி. இங்கு, தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், கி.பி., 17,18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று செப்பேடுகளை கண்டறிந்துள்ளார்.
இந்த செப்பேடுகள் குறித்து ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து திடியன் செல்லும் பழைய வணிக சாலையில் அமைந்துள்ளதுள்ள ஊர் கரிசல்பட்டி. இங்குள்ள சோலை தேவர் என்ற வீரபுத்திர கோடாங்கியிடம் செப்பேடுகள் இருப்பதாக அறிந்து, அவரை சந்தித்தேன். அச்செப்பேடுகளை, பூசை அறையில் வைத்து அவரது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.
சுமார் 1 அடி நீள அகலத்துடன் உள்ள இச்செப்பேடுகளில், ஒரு பக்கத்தில், 40 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் சுமார் 17,18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்தச் செப்பேடுகளில், நான்கு வெவ்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன.
முதலாவது, கருமாத்தூரில் உள்ள கலியுக சிதம்பரேஸ்வர் கோயிலில் இருந்த கருவறைக்கு முன்பாக புதிய முன்மண்டபம் கட்டுவதற்கான ஒப்பந்தம் மற்றும் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. இதற்கான குழுவில் தெய்வ பெருமாள் பூசாரி, சேர்மதேவன் வகையறாவைச் சேர்ந்த இராமணாதேவன், ஆண்டித்தேவன், எழும்பதேவன் வகையறா கலுவத்தேவன், குப்பணதேவன், சிலுக்கத்தேவன் கருத்தாஞ்செட்டி, சோலைத் தேவன், கருத்தாஞ்செட்டி, மற்றும் தேவங்க பெருமாள் ஆசாரி ஆகிய ஒன்பதும் பேரும் இருந்துள்ளனர். இந்த செய்தியின் வாயிலாக, வெவ்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து கோவில் வழிபாட்டில் ஈடுபட்டதை அறிய முடிகிறது.
இரண்டாவதாக, கண்ணனூர், கருமாத்தூர், வடக்கம்பட்டி, விக்கிரமங்கலம், பெருமாள் கோயில்பட்டி, புள்ளநேரி போன்ற கிராமங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட காவலாளிகளையும், அவர்கள் சார்ந்த வகையறா குறித்தும் விரிவான செய்திகள் உள்ளன.