அண்மையில் நடைபெற்ற 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மதுரை வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்வு செய்திருப்பதும் வரி விலக்குகளை விலக்கிக்கொண்டிருப்பதும் தொழில் வணிகத்துறையையும் பொதுமக்களையும் மிகவும் பாதிக்கும்.
இதுவரை வணிகப்பெயர் இல்லாத மற்றும் ஏற்கெனவே இருந்த வணிகப் பெயருக்கான உரிமையை விட்டுவிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் வரிவிலக்கு கொடுக்கப்பட்டுவந்தது. அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு வணிகப்பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும்பாதிப்பு:இச்சூழலில், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சட்டப்பூர்வ எடையளவு சட்டவிதிகளின்படி சில்லறை விற்பனைக்கான பேக்கிங் செய்துலேபில் அச்சிட்டு விற்றால் வரி உண்டு என அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது. வணிகப் பெயர் வைத்திருந்தவர்கள் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
ஏற்கெனவே வணிகப்பெயர் வைத்திருந்தவர்கள் வரி விலக்குப்பெற்ற வணிகப்பெயர் இல்லாத தயாரிப்பாளர்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல், பல ஆண்டுகளாகப் பெரும் பொருட்செலவில் பாதுகாத்து வந்த தங்கள் வணிகப் பெயரின் உரிமையையே விட்டுவிட்டு வரி விலக்குச் சலுகையைப் பெற்றார்கள்.
இப்பொழுதுவணிகப்பெயரில்லாத பொருட்களுக்கும் வரி என அறிவித்திருப்பது வேதனைஅளிப்பதாக உள்ளது. அத்துடன் மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு (Wet-Grinder) ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி இருப்பது இப்பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாகும்.
அமைச்சர்கள் குழு உடனடியாக அமைக்க வேண்டும்:இவை அனைத்தும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். ஜிஎஸ்டி வரிச்சட்ட அமலாக்கம் தொழில் வணிகத்துறைக்கு ஏற்படுத்தியுள்ள வேதனைகளையும், வரி செலுத்துவோர் அன்றாடம் சந்திக்கின்ற சிரமங்களையும் நீக்க வேண்டும் என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்திந்திய அளவில் தொழில் வர்த்தக சங்கங்கள் பல தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் கூட இக்கூட்டத்தில் அதைப்பற்றி விவாதிக்கப்படவே இல்லை.
வரி வருமானத்தைப்பெருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எந்தவித ஊதியமும் இல்லாமல் மாதம் சுமார் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துத்தரும் தொழில் வணிகத் துறையினர் மிக முற்போக்கான ஜிஎஸ்டி வரி முறையின் தவறான மற்றும் முன்னுக்குப்பின் முரணான அமலாக்கத்தினால் எதிர் கொண்டுள்ள சிரமங்களையும் வேதனைகளையும் அடையாளம் கண்டு அவற்றைப் போக்கிட “அமைச்சர்கள் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும் 2022 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறவிருக்கின்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தகுந்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க பணிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பிணிநீக்கி உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்