ஆங்கிலேயர்களின் காலத்தில் தென்பகுதியிலிருந்து மதுரையை வடபகுதிக்கு விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் அப்போது மதுரை கோட்டையின் சுவர்களை அப்புறப்படுத்தி, அதன் கற்களைக் கொண்டு யானைக்கல்-செல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் தரைப்பாலம் ஒன்றை அமைத்தனர். வைகையில் வெள்ளம் வரும் காலங்களில் இந்த தரைப்பாலம் மூழ்கிவிடுகின்ற காரணத்தால், வடபகுதிக்குச் செல்வது பெரும் சிரமமாக இருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள மேம்பாலப் பகுதியிலேயே ஆங்கிலேய அலுவலர்களின் சாரட் வண்டிகள் மட்டும் செல்வதற்காக மூங்கில் கழிகளால் பாலம் ஒன்றை அமைத்தனர். இந்தக் கழிகளுக்கிடையே பயணம் செய்யும்போது அடிக்கடி சாரட் வண்டிகளின் சக்கரம் சிக்கிக் கொண்டு அவதிக்குள்ளாகினர். ஆகையால் அதற்கு பிறகுதான் உயர்மட்டப்பாலம் அமைக்கும் எண்ணம் அவர்களுக்கு உருவானது. அந்த எண்ணத்தில் விளைந்ததுதான் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் எனப்படும் ஏவி மேம்பாலம்.
எர்ல் ஆஃப் டஃப்ரைன், ஆல்பர்ட் விக்டர் ஆகியோரின் புகைப்படம் இன்றைய மதுரையின் நடுவே கோடு கிழித்தாற்போல் செல்லும் வைகை ஆற்றில் முதன் முதலாக கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பும் பெருமையும் வாய்ந்ததே ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்.
கடந்த 1886ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் இந்த மேம்பாலத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் பொறுப்பிலிருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைனால் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த இரண்டாண்டு காலத்திற்குள் இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்திற்குத் தயார் செய்யப்பட்டது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - மதுரை மக்கள் வேதனை!
இந்தப் பாலத்தை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்திற்கான கட்டுமான செலவு 2 லட்சத்து 85 ஆயிரத்து 687 ரூபாயாகும். 15 வளைவுகளைக் கொண்டுள்ள இந்த மேம்பாலம் கருங்கற்களால் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் மழைநீர் வழிந்து ஆற்றில் விழும் வண்ணம் அழகிய தண்ணீர் வடியும் தூம்புகள் ஒவ்வொரு வளைவின் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையின் போக்குவரத்திற்கு தற்போதுவரை முதுகெலும்பாய் உள்ள ஏவி பாலம், சற்றேறக்குறைய 300 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
மதுரை ஏவி மேம்பாலம் - புகைப்படம் இதுகுறித்து சமூக ஆர்வலரும் களம் அமைப்பின் நிறுவனருமான வரதராஜன் கூறுகையில், 'மதுரையின் வட-தென் பகுதிகளை இணைக்கின்ற பாலமாக ஏவி மேம்பாலம் திகழ்கிறது. சமூக மற்றும் பொருளியல் சார்ந்த மதுரையின் வளர்ச்சிக்கு ஏவி மேம்பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. நூற்றாண்டு பாரம்பரியம் கண்ட ஆங்கிலேயர் காலக் கட்டுமானங்களுள் இந்த பாலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாள்தோறும் ஏவி மேம்பாலத்தைக் கடந்து லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதற்குப் பதிலாக மதுரை நகர்ப்பகுதியில் வைகையின் குறுக்கே தரைப்பாலங்களும், மேம்பாலங்களும் கட்டப்பட்டு புழக்கத்திற்கு வந்தாலும்கூட ஏவி மேம்பாலத்தின் முக்கியத்துவம் சிறிதளவும் குறையவில்லை' என பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.
களம் அமைப்பின் நிறுவனர் வரதராஜன் பேட்டி மேலும் அவர் கூறுகையில், "இந்த பாலத்தின் ஏழு மற்றும் எட்டாவது வளைவுக்குக் கீழே அடித்தளம் மிகவும் தூர்ந்து ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு பள்ளமாகிவிட்டது. இதனை சரி செய்யக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோன்று பாலத்தின் போக்குவரத்துப் பகுதி சாலையும், மக்கள் நடந்து செல்லும் பிளாட்பாரமும் சமமாகிவிட்டன. ஒன்றுக்கு மேலே இன்னொரு சாலை போடப்படுவதால் பாலத்தின் எடை அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் இதற்கு காரணம். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
களம் அமைப்பின் நிறுவனர் வரதராஜன் பேட்டி இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டபோது இதன் திறப்பு விழாவிற்காக பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் வரவிருந்ததாகவும், அச்சமயம் மதுரையில் பிளேக் நோயின் தாக்குதல் அதிகமிருந்த காரணத்தால் அப்பயணம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அவரது பெயர் இந்தப் பாலத்திற்கு சூட்டப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். வைகை நதியால் இரண்டாகப் பிரியும் மதுரையை ஒன்றாய் இணைக்கும் ஏவி மேம்பாலம், மதுரையின் அடையாளமாக மட்டுமன்றி... நூறாண்டுகளைக் கடந்து வாழும் அதிசயமாகவும் இன்றளவும் திகழ்வது மதுரை மக்களுக்குப் பெருமைதான்...
இதையும் படிங்க:
படித்தது இளங்கலை! பிடித்தது இளங்காளை!