சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. வனத்தைவிட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
அதுபோல இன்று அதிகாலை விளாமுண்டி வனத்தைவிட்டு வெளியேறிய ஒற்றை ஆண் யானை ஒன்று நால்ரோடு கிராமத்திற்குள் நுழைந்தது. அங்கு விவசாயி சிவராஜ் என்பவரது தோட்டத்தில் புகுந்த யானை அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த கதளி ரக வாழை மரங்களைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
காட்டுயானை புகுந்து வாழைத்தோப்பு சேதம் இதைக்கண்ட விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டியபோது அருகே உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நேந்திரன் ரக வாழை மரங்களை சேதப்படுத்தியது.
வனத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானை சேதப்படுத்தியதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தற்போது கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!