ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து முழுக் கொள்ளளவான 42 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மீன் பிடிக்கவோ, மற்ற தேவைகளுக்கோ ஓடையில் பொதுமக்கள் இறங்கவேண்டாம் எனவும் அப்பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.