ஈரோடுமாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது இந்த சரணாலயம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாகக் குளம் மற்றும் மரங்கள் வறண்டுபோனது. இதனையடுத்து ரூ. 2 கோடியே 35 லட்சம் செலவில் இந்தப் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சரணாலயத்தைச்சுற்றிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டதோடு சிறு பாலங்கள், நடைபாதைகளில் பறவைகளின் ரம்மியமான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனிடையே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்ஃபி பாயின்ட் என எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.
பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் சீசன் தொடங்கும். இதனையொட்டி, இந்த காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வருகின்றன.
தவிர சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ணநாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.
இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன. இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் சத்தத்தைக் கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை இந்த பறவைகள் அளிக்கின்றன.