ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடம்பூர், இருட்டி பாளையம், பசுவனாபுரம், மல்லியம்மன் துர்க்கம், மாக்கம்பாளையம், குன்றி, கரளியம், காடகநல்லி உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள மானாவாரி விளைநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலா மரங்கள் உள்ளன.
பலாப்பழங்களை விற்க முடியாமல் தவிக்கும் மலை கிராம விவசாயிகள் - Corona Lockdown
ஈரோடு: கரோனா ஊரடங்கு காரணமாக பலா பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் மரத்திலேயே உள்ளதாகவும். இதனால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இந்தச் சீசனில் விளையும் மிகுந்த சுவைமிக்க பலாப்பழங்களை கடம்பூர் மலைப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்து கெம்பநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடம்பூர் மலைப்பகுதியில் விளைந்துள்ள பலாப்பழங்களை அறுவடை செய்து விற்க முடியாத சூழ்நிலைக்கு மலை கிராம விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக இந்தச் சீசனில் பலாப்பழங்கள் அதிக அளவில் நடைபெறும். ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக பலா மரங்களில் உள்ள பழங்களை அறுவடை செய்ய முடியாமல் அப்படியே விட்டு விட்டதாகவும், இதன் காரணமாக மரங்களில் பலாப்பழங்கள் பழுத்து அழுகி வீணாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.