ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள கொங்குநகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் ஏலச்சீட்டுக்களை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அந்த நபரைக் கண்டறிந்து அவரிடமிருந்து தங்களது பணத்தைப் பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனுக்களை வழங்கினர்.
ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார் - Erode district
ஈரோடு: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், பெருந்துறையைச் சேர்ந்த பூபதி என்பவர், ஈரோடு சம்பத்நகர் பகுதியில் நிதிநிறுவனத்தையும், ஏலச்சீட்டுக்களையும் நடத்தி வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக ஒழுங்காக நிதி நிறுவனத்தையும், ஏலசீட்டுக்களையும் நடத்தி வந்த பூபதி கடந்த சில மாதங்களாகவே ஏலச்சீட்டு முதிர்வடைந்தவர்களுக்கு முறையாக பணத்தைச் செலுத்தாமலும், ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு அதற்கான தொகையைத் தராமல் ஏமாற்றியுள்ளார்.
ஐந்து லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை ஏலச்சீட்டுக்களை நடத்தி வந்தார். தற்போது பணத்தைத் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 20 கோடி வரை வசூல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.