ஈரோடு:வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சுற்றுப்பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமங்கள், பறவைகளை துன்புறுத்தாதவாறு வெடியில்லாத, புகையில்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில், 2000ஆம் ஆண்டு முதல், சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி பாசன கால்வாய்க்கு திறந்து விடப்படும், உபரி நீர் குளமாக தேங்கும் பகுதியாகவும் சின்னஞ்சிறு மரங்களுடனும் இந்த சரணாலயம் பசுமையாகக் காணப்படுகிறது.
செழிப்பான நிலங்களைத் தேடி வரும் பறவைகள்
இச்சூழலில், உள்ளூர் பறவைகள் மட்டுமன்றி வெளிநாட்டு பறவைகளும் இங்கு வந்து தங்கி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கிறது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளும், 20க்கும் அதிகமான வெளிநாட்டுப் பறவைகளும் வந்து செல்கிறன. வனத் துறையினரின் கணக்கெடுப்பின்படி, மாதமொன்றுக்கு மொத்தம் 22 ஆயிரம் பறவகைகள் சரணாலயத்திற்கு வந்து தங்கி செல்வதுடன், 100 வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதாகவும் தெரிகிறது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பறவை ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் வந்து பறவைகளைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இயற்கைக்கும், உயிர்களுக்கும் இங்கு இடையூறு இல்லை
ஏறக்குறைய சுற்றுலாத்தலத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிரம்பியுள்ள இச்சரணாலயத்தை சுற்றி பி.மேட்டுப்பாளையம், வெள்ளோடு, தச்சாங்கரவெளி, செல்லப்பம்பாளையம், புங்கம்பாடி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளும் உள்ளன.
இச்சூழலில், இந்த சரணாலயம் தங்களின் பகுதியில் அமைந்திருப்பது தங்களுக்கு பெருமையளிக்கக் கூடியது என்பதால் கடந்த 16 ஆண்டுகளாக இங்கு வந்து தங்கி வந்து செல்லும் பறவைகளுக்கும் எவ்வித இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து, அதிகம் ஒலியெழுப்பும் வெடிகளை வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை கொண்டாடி வருவதாக கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மாசற்ற தீபாவளி
இக்கிராமத்தின்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளிக்கோ, வேறேதேனும் நிகழ்வுகளுக்கோ பட்டாசுகளை வெடிப்பதில்லை என்று தங்களுக்குள் ஒரு முடிவெடுத்து, அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
பறவைகளுக்காக 16 வருடங்களாக பட்டாசுகள் இன்றிதீபாவளி கொண்டாடி வரும் இக்கிராம மக்கள், வெடி வெடித்து மாசை உமிழ்ந்து வரும் மக்கள் மத்தியில் பெரும் எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கின்றனர். அனைத்து உயிர்களும் சமம் என்ற அடிப்படையில், எந்த உயிரையும் சீண்டாது, நமது கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே இச்சிறப்புத் தொகுப்பின் உயிர்.