ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அருகே தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரிகள் மூலமாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இவ்வாறு, லாரிகளில் அதிக உயரத்திற்கு கரும்புகளை ஏற்றி செல்வதால் ஆசனூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் உள்ள உயர தடுப்பு கம்பியில் சிக்கிய கரும்புத் துண்டுகள் சிதறி கீழே சாலையில் விழுகின்றன. இதற்காகவே காத்திருந்த நான்கு யானைகள் இன்று (அக்.17) தங்களது குட்டிகளுடன் அங்கு முகாமிட்டு கரும்புத் துண்டுகளை ருசித்துக்கொண்டிருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.