ஈரோடுஅடுத்த சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி என்பவருக்குச்சொந்தமான விவசாய நிலத்தில், விவசாயம் செய்து வந்தநிலையில் அதனை தற்போது கைவிட்டுள்ளார். காரணம், இந்நிலையில் அப்பகுதியில் செயல்படும் சாயம், சலவைத் தொழிற்சாலைகள் தான்.
விவசாயி எடுத்த முடிவு:அத்தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரினால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்தைக் கைவிட்டு தனது சொந்த நிலத்தில் குடோன் அமைத்து, அதனை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு பிழைப்பு நடத்தலாம் எனத்திட்டமிட்டு வங்கியின் மூலமாக கடன் பெற்று கட்டுமானப்பணிகளை மேற்கொண்டார்.
மாசடைந்த நீரால் வந்த சோதனை:கட்டடப் பணிகளுக்காக ஆழ்துளைக்கிணறு அமைத்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். இதற்காக வெள்ளை நிறத்தில் வாங்கிய ஹாலோ பிளாக் கற்கள், அப்பகுதியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஊற்றப்பட்ட நீரால் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருந்த ஹாலோ பிளாக் கட்டடச் சுவர் சாய, சலவை ஆலைக்கழிவு நீர் கலந்த தண்ணீரை நிலத்தடியில் இருந்து மோட்டார் மூலமாக தெளித்ததால் கட்டடத்தின் சுவர் முழுவதிலும் மஞ்சள்நிறமாக மாறியுள்ளது கவலையளிக்கிறது.
கிராமத்தினரும் கால்நடைகளும் அவதி:மேலும், கட்டுமானத்தேவைக்காக பேரலில் நிரப்பிய நீர் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராமசாமி கட்டடத்தின் உறுதித்தன்மையின்மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை மோட்டார் மூலமாக தோட்டத்திற்கு பாய்ச்சும் பொழுது கழிவுநீரின் காரணமாக நுரை பொங்க செல்வதால் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.