கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பத்திற்குட்பட்ட சவுதஹள்ளி கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், தோட்டத்தில் பணிபுரிந்த சிவலிங்கப்பா, சிவமாதப்பா ஆகிய இருவரையும் புலி தாக்கியது. இதனைத் தொடர்ந்து, ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, வனப்பகுதிகளில் சுமார் 140 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டும், இரண்டு டிரோன் கேமராவையும் பயன்படுத்தியும் புலியை தேடிவந்தனர். பின்னர் வனத்துறையினர் ஆறு கும்கியானைகள், கால்நடை மருத்துவ குழுவினருடன் வனப்பகுதிக்குள் புலியை பிடிக்கச் சென்றனர். புலிகள் வாழ்க்கை முறைகள் குறித்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டு கால்தடம், நடமாட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.