தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2021, 4:54 AM IST

ETV Bharat / city

ஈரோட்டில் 2, 300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கிணறு கண்டுபிடிப்பு

ஈரோடு: சென்னிமலை, கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ancient well found at kodumanal
ancient well found at kodumanal

தமிழ்நாடு தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ. ரஞ்சித் தலைமையில் கடந்த ஓராண்டாக ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் கரோனா காரணமாக அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தற்போது நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டி புதிதாக மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் இந்த அகழாய்விலும் பல்வேறு பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 2, 300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணறிலிருந்து தண்ணீர் எடுக்க இரு திசைகளில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று வகையான பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், முதுமக்கள் தாழிகளை மட்டும் வைத்து அடக்கம் செய்தல், முதுமக்கள் தாழியுடன் பலகை கற்களை வைத்து அடக்கம் செய்தல், வெறும் பலகை கற்களை மட்டும் வைத்து அடக்கம் செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

இதுவரை 662 உடைந்த பல வகையான வளையல்கள், முழுமை பெற்ற 343 கல்மணிகள், இரும்பு, கண்ணாடி, தாமிரத்தில் தயார் செய்த 53 வகையான பொருட்கள். ஆணிகள், உளி, கத்தி உள்ளிட்ட இரும்பினாலான 193 பொருள்கள். பல வண்ணங்களில் 103 சிறிய ஓடுகள், 15 நாணயங்கள் என மொத்தம் 1,535 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details