ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனது வீட்டின் முன்புறத்தில் தனது கார், இருசக்கர வாகனம், குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி காலை அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் காணாமல் போனது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்த போது காலை 9.30 மணியளவில் தனது வீட்டின் முன்புற நுழைவுவாயிலைத் திறந்து கொண்டு, ஒரு நபர் உள்ளே நுழைந்து மிதிவண்டியை எடுத்துக்கொண்டு செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீடு புகுந்து மிதிவண்டி திருடும் திருடன், கண்காணிப்பு கேமராவில் பதிவான போது...
இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால் புகாரை காவல் துறையினர் பெரிதாக கண்டுகொள்ளாததால் இந்த சிசிடிவி காட்சியை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து, இந்த திருட்டுப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு அவரது தொலைபேசி எண்னை பரிமாறியுள்ளார். இந்த வாட்ஸ்அப் சிசிடிவி காட்சி அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையன் மிதிவண்டியைத் திருடி செல்லும் காட்சி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.