ஈரோடு:கோபிசெட்டிபாளையம் புதுக்கரைபுதூர் அருகே, கோயம்புத்தூரிலிருந்து அந்தியூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், கவுந்தப்பாடியிலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ராஜசேகரன், லோகநாதன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டன. இதையடுத்து, அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மோசமான சாலையால் விபத்து
அங்கு அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் புதுக்கரைபுதூரிலிருந்து கோபி செல்லும் சாலை மிகவும் வழுவழுப்பாக உள்ளதாலும் விபத்து நடைபெற்றபோது மழை பெய்ததாலும் பேருந்தில் பிரேக் பிடித்தும் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் இதேபோன்று விபத்துகள் நடைபெற்றுவருவதால் அப்பகுதியில் உள்ள சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து இதுபோன்ற விபத்துகளைத் தடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மண் சரிந்துவிழுந்த விபத்தில் வடமாநிலத் தொழிலாளி மரணம்