தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தைக் கைவிடுக - தேர்தலைப் புறக்கணிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை! - farmers protest

பவானி சாகர் அணையிலிருந்து மூன்று மாவட்டங்களுக்குப் பாசனத்திற்குச் செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லாவிடில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை, 10 தொகுதிகளிலுள்ள கீழ்பவானி பாசன விவசாயிகள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

stop new concrete plan in keezh bhavani canal
stop new concrete plan in keezh bhavani canal

By

Published : Dec 18, 2020, 7:28 AM IST

ஈரோடு: பவானி சாகர் அணையிலிருந்து மூன்று மாவட்டங்களுக்குப் பாசனத்திற்குச் செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கைவைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலம் நேரடி பாசனமும், ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் மறைமுக பாசனமும் பெற்றுவருகிறது.

இந்த மூன்று மாவட்ட பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இது திகழ்கிறது. இச்சூழலில், தமிழ்நாடு அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.178 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், கசிவு நீர் மூலம் பாசனம் பெறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் பாலைவனம் ஆகும் சூழ்நிலை உள்ளதாகவும், தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப்பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

இவ்வேளையில், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கடுக்காம்பாளைத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளும், பொதுமக்களும், மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விவசாய சங்க நிர்வாகி செங்கோட்டையன் பேட்டி

இக்கூட்டத்தில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பெறப் போவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதுடன், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் 10 தொகுதிகளிலும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் விவசாய சங்க நிர்வாகிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details