ஈரோட்டில் வண்ணார் பேரவையின் சார்பில் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு பங்கேற்று, நிறைவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
2016ஆம் ஆண்டு அக்டோபரில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சூழ்நிலையிலிருந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு தற்போது தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும், ஏழு பேர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டும், தடைகோரியும் மனு செய்திருக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்திருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்தத் தேர்தல் உறுதியாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. பலமுறை ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் அவர்களின் பிரதிநிதிகளாலும் இத்தேர்தல் வருமா? வராதா என்ற அளவில் வெறுப்பும், கோபமும் வருகிற அளவிற்கு, அதிமுக - திமுக என இரு கட்சிகளும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர் என்ற சந்தேகம் இருக்கின்றது. எனவே 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ” என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு பேட்டி ரஜினி கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”நடிகர்கள் இனி நாடாள முடியாது. அரசியலிலிருந்து ஏற்கனவே பல நடிகர்கள் ஓடிவிட்டார்கள். தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியும் கமலும் இனி கால் பதிக்க முடியாது. கோடம்பாக்கத்திலிருந்தும் சாலிகிராமத்திலிருந்தும், நடிப்பை தொழிலாக கொண்ட வேடதாரிகள், ஒப்பனைவாதிகளை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்” என்று கூறினார்.