கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்த சத்தியமங்கலத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடங்கியது. இந்த அங்காடியில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக, சத்தியமங்கலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி, சத்தியமங்கலம் வேட்டுவர் தெருவில் தொடங்கியது.
சுத்தமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். தற்போது வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட சில காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தக்காளி கிலோ ரூ.10, பெரியவெங்காயம் கிலோ ரூ.35, உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 பச்சைமிளகாய் கிலோ ரூ.40, பீட்டூட் கிலோ ரூ.20 கத்திரிக்காய் கிலோ ரூ.40 அவரை கிலோ 30 என குறைந்த விலையில் துணிப்பையில் கட்டி விற்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகள் வாங்கிச் சென்றனர். நடமாடும் காய்கறி விற்பனைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. காய்கறிகள் நடமாடும் வாகனத்தில் முக்கிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு மேலும் 3 நடமாடும் வாகனங்கள் பயன்படுத்தவதாகவும் ஒரே இடத்தில் அதிகமானவா்கள் கூடுவதால் ஏற்படும் நோய்த் தொற்றை தடுத்திட அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி மற்றும் கூட்டுறவு சங்கம் சார்பில் வலியுறத்தப்பட்டது.
இதேபோல், தருமபுரி உழவர் சந்தை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக தருமபுரி நகரப்பகுதியில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பொதுமக்கள் தொடர்ந்து தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்ட உழவர் சந்தை காய்கறி கடைகளுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அதிக அளவு கூடினர்.
தருமபுரி நகர பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி தொகுப்பு 100 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது இத்தொகுப்பில் தக்காளி கத்தரிக்காய் முள்ளங்கி பச்சைமிளகாய் பாகற்காய் புடலங்காய் கொத்த மல்லி சிறிய வெங்காயம் எலுமிச்சம்பழம் உள்ளிட்ட 10 பொருளகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய். பெரிய வெங்காயம் சிறிய வெங்காயம் உருளைக்கிழங்கு தொகுப்பு 150 ரூபாய். கேரட் பீட்ரூட் பீன்ஸ் முட்டைகோஸ் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய். முலாம் பழம் வாழைப்பழம் சப்போட்டா திராட்சை சாத்துக்குடி பழங்கள் தொகுப்பு 100 ரூபாய் என விற்பனைக்கு வைத்துள்ளனர்.பொது மக்கள் ஆர்வமாக தங்கள் பகுதிகளில் இருந்து தங்களுக்கு தேவையான தொகுப்புகளை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் சாதனங்கள் வெடிக்கும் என்ற பயம் வேண்டாம் - அமைச்சர் தங்கமணி!