தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்டது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இவ்வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. அரியவகை மரங்களுள்ள இந்த வனப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகளவில் உள்ளன.
இலந்தை மரங்களில் உள்ள இலந்தைப் பழங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் இந்தப் பழங்களை குரங்கு, கரடி போன்ற விலங்களும் பல்வேறு வகையான பறவைகளும் விரும்பி தின்பது வழக்கம்.
இலந்தை மரங்களில் மார்கழி, தை ஆகிய மாதங்களில் பழங்கள் கிடைக்கும். இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்த்து பச்சைப்பசேலென அழகாகக் காட்சியளிக்கிறது.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பண்ணாரி அம்மன் கோயில் முதல் காரப்பள்ளம் சோதனைச்சாவடிவரை சாலையின் இருபுறமும் உள்ள சாலையோர வனப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகளவில் உள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் சாலையோரம் பூத்துக்குலுங்கும் இலந்தைப்பூக்கள் மழை பெய்ததால் இலந்தை மரங்களில் பூக்கள் பூத்துள்ளன. இந்தப் பூக்கள் விரைவில் காய்களாக மாறி இரண்டு மாதங்களில் இலந்தை காய்கள் பழுத்து பழமாகும். இந்த இலந்தைப் பழங்களை வனவிலங்குகளும் பறவைகளும் விரும்பி தின்பதோடு, இச்சாலையில் பயணிக்கும் பயணிகளும் பறித்துச் செல்வர். இலந்தை மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும் காட்சி ரம்மியமாக உள்ளது.