தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு: விற்பனையில் களைக்கட்டிய பூ மார்க்கெட், கால்நடை சந்தை! - வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் பண்டிகை காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களும், மழை காரணமாக புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் கறவை மாடுகளும் அமோகமாக விற்பனையாகின.

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை, சத்தியமங்கலம்
sales of flowers

By

Published : Aug 20, 2021, 11:59 AM IST

ஈரோடு:சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வரலட்சுமியால் விற்பனை

இந்த நிலையில், இன்று (ஆக.20) வரலட்சுமி விரதம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பண்டிகையாக விளங்கும் வரலட்சுமி விரதம் பண்டிகை காரணமாக மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக.18) மல்லிகை பூ கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று (ஆக.19) 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி பூ நேற்று முன்தினம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று 280 ரூபாய்க்கும் விற்பனையானது.

பூக்களை போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள் கர்நாடக மாநிலம், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை அனுப்பி வைத்தனர்.

கறவைமாடு விற்பனை

அதேபோல், புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக இந்த கால்நடை சந்தை விளங்குகிறது.

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

இந்நிலையில் நேற்று (ஆக.19) புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 50 எருமைகள், 650 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 90 வளர்ப்புக் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வந்திருந்த நிலையில், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர்.

கால்நடை விலைப்பட்டியல்

எருமைகள் 16 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், கறுப்பு, வெள்ளை மாடு 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஜெர்சி 23 ஆயிரம் முதல் 53 ஆயிரம் வரையிலும், சிந்து 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கும், நாட்டு மாடு 40 ஆயிரம் முதல் 76 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ப்பு கன்றுகள் ஆறாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் ஏறத்தாழ இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தீவனத்துக்கு பிரச்னை இருக்காது. இதனால், கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு மாடுகளை வாங்கிச் செல்வதாகவும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கரோனா சமயத்தில் விற்பனை மந்தமான நிலையில், தற்போது மழை பெய்துள்ள கறவை மாடுகள் விற்பனை சூடு பிடித்ததால், வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

ABOUT THE AUTHOR

...view details