ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் பழைமை வாய்ந்த ஆதிகருவண்ணராயர், பொம்மிதேவி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமகம் தினத்தில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா வருகிற மார்ச் மாதம் ஒன்றாம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் ஏழாம் தேதி ஹோமம், மகா அலங்கார பூஜையும், எட்டாம் தேதி அதிகாலை பொங்கல் விழா, ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
கோயில் மற்றும் அதிகாரிகளிடையே நடந்த சமாதானப்பேச்சுவார்த்தை உடன்பாடு நகல் இந்நிலையில் விழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழா கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், கோயிலுக்குச் செல்வோர் அறிமுகமில்லாத நபர்களை அழைத்து வரக்கூடாது என காவல்துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் மார்ச் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மட்டுமே கோயிலுக்குச் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் உணவு சமைப்பவர்கள், சமையல் எரிவாயு (கேஸ்) பயன்படுத்தி சமைக்க வேண்டும் எனவும் வனப்பகுதியிலிருந்து விறகு எடுத்து சமைக்க அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெங்குமரஹாடா ஆதிகருவண்ணராயர் கோயில் திருவிழா மார்ச் ஒன்றாம் தேதி தொடக்கம் இதுமட்டுமின்றி, “பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசக்கூடாது, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் வனப்பகுதியில் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம், சிகரெட், பீடி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மயிலாப்பூர் காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு!