ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் தமிழ்நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த போதிலும் அதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகாராக உள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் அடிக்கடி விழுந்து விபத்து ஏற்படுவதாகவும், பணிகள் முடிந்தும் சாலைகள் சீரமைக்கப்படாத நிலையில் தற்போது பெய்யும் மழையால் சாலைகள் சேரும் சகதியுமாய் மாறி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அலுவலர்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆவேசமடைந்த அப்பகுதியினர், ஈரோடு- கரூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்களும், காவல்துறையினரும் மக்களை சமாதானப்படுத்தினர். மேலும் இதையடுத்து இரவு நேரத்திலேயே பொக்லைன் வரவழைக்கப்பட்டு சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.