கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 595 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்வு கெட்டிசெவியூர் அரசு பள்ளியில் இன்று (டிச.22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரசித்தி பெற்ற கோபிசெட்டிபாளையம் பாரியூர் குண்டம் திருவிழா கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை சார்பில் நேற்று(டிச.21) அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை எதிர்த்து இன்று காலை பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 300பேர் மட்டும் பங்கேற்று, திருவிழாவை நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது.
கெட்டிசெவியூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனி மனித இடைவெளி, முகக் கவசம் போன்ற கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்படும். பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய மட்டும் அனுமதி. குண்டம் இறங்க அனுமதியில்லை.
தேர்தலுக்காக பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. நிவர் புயல், கரோனா தொற்று ஊரடங்கு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க :சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு!