ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சேனிடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காசநோய் சிகிச்சைக்கு இந்திய அளவில் புகழ்பெற்றதாக விளங்கிவருகிறது. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான செவிலியர்கள், ஊழியர்கள் இல்லாததால், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக இந்த மருத்துமனை, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையெனக் கூறி ஒப்பந்த தொழிலாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
perundhurai hospital contract labourers protest for salary கரோனா நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டபோது ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும், தொழிலாளர்கள் அனைவரும் எப்போதும் போல பேரிடர் காலங்களிலும் பணியாற்றிடவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தும் கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
தங்களது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் கரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றிய போதும், இதுவரை தங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஊதியத்தைக் கூட வழங்காதது அதிர்ச்சியளிக்கிறது. தங்களுக்கான ஊதியம் வழங்குவது குறித்து உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.
பேரிடர் காலத்தில் ஆர்பாட்டம் நடத்தக்கூடாது என்று மூன்று மாத காலம் பொறுமையாக இருந்தும் இதுவரை தங்களுக்குரிய ஊதியத்தை வழங்காததால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தங்களுக்குரிய ஊதியத்தை வழங்கினால் மட்டுமே பணியை மேற்கொள்வோம் எனத் தெரிவித்தனர்.