ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர் ஆகியவை மேட்டுப்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மாயாற்று நீரும் பவானிசாகர் அணைக்கு வருவதால் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
மேலும் பவானிஆற்றில் உபரிநீர் திறந்துவிடும்போது தாழ்வான பகுதியில் குடியிருப்போர் வெள்ளநீரால் பாதிக்கப்படுவர் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகராட்சி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அணைக்கு நீர் வரத்து அதிகமாக வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி, நகராட்சித் துறைக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது.