ஈரோடு வாசுகி வீதிப்பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தப் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, விஜயா, ரமாதேவி ஆகியோர் தங்களது குழந்தைகளை ஆறாம் வகுப்பிற்கு சேர்ப்பதற்காக பள்ளிக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள், பள்ளியில் 500 ரூபாய் கல்விக் கட்டணத்திற்கு பதிலாக கூடுதலாக 6,000 ரூபாய் கல்விக் கட்டணத் தொகை கேட்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கரோனா காலத்தில் வருவாயின்றி வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளைத் தேடிச்சென்று தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விருப்பப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கரோனா காலத்தில் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களை இதுபோல் கல்விக் கட்டணம் அதிகம் கேட்டு தொந்தரவுப் படுத்திட வேண்டாம்.
மேலும் வருவாயின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களுக்கு அவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள குறைவான கல்விக் கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பெற்றோரின் புகார்களைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் புகார் கூறியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தனர்.