ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை. பறவைக்காய்ச்சல் நோய் என்பது பறவை இனங்களைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோய். இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப்பறவைகள் ஆகியவற்றை முக்கியமாகத் தாக்கும் ஹெச்5என்ஒன் என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது.
இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், புறக்கடைக் கோழிகளை நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பறவைக்காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.