கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதியில் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநிலத்தவர்களால் நடத்தப்படும் தனியார் பல்பொருள் அங்காடியில் சோதனை மேற்கொண்டபோது அங்குத் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மொத்த விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நெகிழி வைத்திருந்தவருக்கு ரூ. 2000 அபராதம்; நகராட்சி நிர்வாகம் அதிரடி - அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல்
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கடைவீதியில் செயல்படும் தனியார் பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் எடையுள்ள ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் நகராட்சி வாகனங்களில் ஏற்றிச்சென்று குப்பைக்கிடங்கில் வைத்து அழித்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை கடிதம் கொடுத்தனர்.
மேலும் இதுபோன்று தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமையும் ரத்து செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.