ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களாக சுகாதாரத்துறை, மருத்துவத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் ஒரே சமயத்தில் 450 நபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதி பெற்றிடும் வகையில் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதி தேவைப்படாத 500க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றிடும் வகையில் படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் 450 நோயாளிகளும் ஒரே சமயத்தில் ஆக்சிஜன் வசதி பெற்று வருவதற்கு சிலிண்டர்கள் போதாத நிலையில், லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டு சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி வரப்பட்டது.
லாரிகள் வருவதற்கு தாமதமானால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மருத்துவத் துறையினர் பெருந்துறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்திடம் தெரிவிக்க, கூடுதல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றார்.
ஆக்சிஜன் சிலிண்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்த முதலமைச்சர் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கொள்ளளவு கொண்ட ஆக்சின் சிலிண்டர்களை பெருந்துறையில் நிறுவிட உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து மருத்துவமனையில் நிறுவப்பட்ட ஆக்சிஸன் சிலிண்டர் இயக்கத்தை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் அனுமதியளித்துள்ள கூடுதல் சிலிண்டர் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நோயாளிகளுக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி தொடர் ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சையளித்திட முடியும். கூடுதலாக 150 நோயாளிகள் சிகிச்சை பெற்றிடவும் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் விபத்துக்களின்போது உயிரிழப்பவர்களது உடற்கூறாய்வுகளை மேற்கொள்வதற்கான அரசாணையையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.