கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திற்கும் நேரில் சென்று அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”கொரோனா வைரஸ் எல்லோரையும் அச்சுறுத்திவருகிறது. பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் 21 நாள்கள் அறிவித்த ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்.
நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நோயினால் எந்த ஒரு உயிரையும் இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் அரசு பணியாற்றி வருகிறது. இதற்கு மக்களும் தங்களது ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். அதற்காக மக்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தாய்லாந்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்திருந்த இருவருக்கு கரோனா தொற்று உள்ளது. அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய 15 நபர்களையும் மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகிறோம்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் அறிப்பார். மருந்து வாங்க வந்ததாகக் கூறி வெளியே வரும் மக்களிடம் மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்து அவர்கள் வாங்கும் மருந்தைப் பொருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்” என்றார்.