தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அப்பா, அம்மா நுங்கு விற்றுதான் படிக்க வச்சாங்க... கரோனாவால் கேள்விக்குறியான மருத்துவப் படிப்பு - corona virus impact

ஈரோடு: நுங்கு விற்றதில் கிடைக்கும் வருமானத்தில் படிப்பை தொடர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவரின் நிலை தற்போது கரோனாவால் கேள்விக்குறியாகியுள்ளது.

siva
siva

By

Published : Jun 18, 2020, 9:15 PM IST

உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா தொற்று பல்வேறு பாடங்களை மானிட சமூகத்திற்கு கற்பித்து வருகிறது. இந்தியா போன்ற நாட்டில் தற்போது வைரஸை விட பசி என்னும் கொடுமைதான் வாட்டி வதைத்து வருகிறது. கரோனா தொற்று பலரது வாழ்வில் இடியை இறக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணம் ஒரு சாமானியனின் குடும்பத்தின் வறுமையை போக்கிவிடுமா என்பது கேள்விக்குறிதான்.

இரண்டு நாள் சம்பளம் ஒரு மாதம் நிவாரண பணம், அரசு அளிக்கும் உணவு பொருள்கள் ஒரு வார கணக்காகவே பார்க்கலாம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வானளாவிய நகர கட்டடங்களை அண்ணாந்து ரசிக்கும் குணம் கொண்ட அந்த இளம் வயதில் ஒரு இளைஞன் மருத்துவம் படிக்கச் செல்கிறான். தாய், தந்தை உடல் வறுத்தி படிக்க வைத்த செல்லப்பிள்ளையின் கனவு கரோனாவால் சுக்கு நூறாய் கலைந்தனவோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் படிப்பது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. நடுத்தர குடும்பத்து இளைஞனின் ஆசையெல்லாம் உயர பறக்கும் பறவை போன்று உயிரை பணைய வைக்கும் சாகசமாகவே பார்க்கப்படுகிறது. கரோனாவால் மருத்துவம் படிக்க முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் இளைஞரை பற்றிய சிறுதொகுப்பு...

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம் எலத்தூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் செல்வி தம்பதிக்கு மகேந்திரன், சிவா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மகேந்திரன் டிப்ளமோ முடித்து விவசாயப் பணி செய்து வருகிறார். இளைய மகன் சிவா சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிக்காரர். நம்பியூர் அருகே கொமாரசாமிகவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

சிவா குடும்பத்தினர்

இதனைத்தொடர்ந்து அதே பள்ளியில் சிவா இலவசமாக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க பள்ளி நிர்வாகம் உதவியாக இருந்தது. 2016ஆம் ஆண்டு நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரத்து 179 மதிப்பெண்கள் பெற்று, வேலூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை தொடர்ந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சிவாவின் பெற்றோர் நுங்கு விற்று படிக்க வைத்து வந்தனர். கரோனா தொற்றால் நீடித்து வரும் ஊரடங்கால் மருத்துவக் கல்லூரி படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சிவாவின் பெற்றோர் விவசாயக் கூலி செய்து, வீட்டில் ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் பனைமரங்களை ஏலம் எடுத்து அதனை மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் நுங்கு விற்பனை செய்து அந்த பணத்தில் சிவாவை 3 ஆண்டுகள் பெற்றோர் படிக்க வைத்தனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கு பனைமரங்களை ஏலம் எடுத்தனர்.

கரோனாவால் தடைபட்ட மருத்துவப் படிப்பு

அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கல்விக் கட்டணத்தை செலுத்த தயாரான நிலையில், யாரும் எதிர்பார்க்காத கரோனா இடியை இறக்கியுள்ளது. இதனால், ஏலம் எடுக்கப்பட்ட பனைமரங்களில் நுங்கு எல்லாம் பழுக்கத் தெடாங்கிவிட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக சிவா நுங்கு விற்க முடிவு செய்துள்ளார். தான் ஒரு மருத்துவ மாணவர் என்ற தோற்றமில்லாமல் சாதாரண கிராமத்து இளைஞனாக, பெற்றோருடன் நுங்கு விற்று கல்விக் கட்டணத்தை பெற முயற்சித்து வருகிறார்.

நுங்கு விற்பனை இல்லாத நாளில், வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழிகளை கவனித்து வருகிறார். அவரது நிலையறிந்து பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த வகையில், அவரது மருத்துவப் படிப்பிற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனையடுத்து, சிவாவின் மருத்துவப் படிப்பிற்கு அவரும் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிக்காக போராடும் சிவாவின் கண்கள் எதிர்காலத்தை தேடிக் கொண்டிருக்கிறது, படிப்பு என்னும் பசி தீரும் வரை அவரது போராட்டம் தொடரும்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details