ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் பேரவை மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் இந்த போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் தகுதியுள்ள 322 காளைகளும், 222 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் வீரர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய காளைகளுக்கும் தங்கக் காசு, செல்போன்கள், கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8.15 மணிக்குத் தொடங்கி மதியம் 2.45 வரையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கிப் பரிசுகளை வென்றனர்.
போட்டியின் போது காளைகளை அடக்க முயன்ற 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மேலும் கடும் நெரிசல் காரணமாக 4 பார்வையாளர்கள் மயக்கமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.