சத்தியமங்கலம் அடுத்த புதுகுய்யனூர் வனகிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகள் மிரட்சியுடன் சப்தம் போடுவதைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த தங்கராஜ் ஆட்டுப்பட்டியைப் பார்த்தார். அங்கு சிறுத்தை ஒன்று ஆட்டை இழுத்துச் சென்றதைப் பார்த்து உறைந்துபோனார்.
இதுகுறித்து, பவானி சாகர் வனத்துறையினருக்கு தங்கராஜ் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் தோட்டத்தில் பதிவான சிறுத்தையின் கால்தடத்தை வைத்து ஆய்வு செய்தனர். தோட்டத்தையொட்டியுள்ள வனத்தில் ஆட்டின் பாதி உடல் தின்ற நிலையில் கிடந்ததைக் கண்டு வந்தது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
கூண்டில் சிக்கிய சிறுத்தை... பொதுமக்கள் மகிழ்ச்சி அதனைத் தொடர்ந்து நேற்றிரவு சிறுத்தையைப் பிடிக்க ஆட்டுப்பட்டி அருகே கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு பகுதியில் உயிருடன் ஆட்டை கட்டி வைத்தனர். வழக்கம்போல இன்று அதிகாலை ஆட்டை வேட்டையாட வந்த 6 வயதுள்ள ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூண்டில் மாட்டிக்கொண்டதால் அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது கூண்டின் கம்பியில் மோதி தலையில் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் அசோகன், துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கூண்டில் மயக்க நிலையிலிருந்த ஆண் சிறுத்தையை வாகனம் மூலம் தெங்குமரஹாடாவுக்கு கொண்டுசென்று வனப்பகுதியில் விடுவித்தனர். கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டதால் கிராம மக்களின் அச்சம் நீங்கி, மகிழ்ச்சி அடைந்தனர்.