ஈரோடு: ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் மக்கள் ஆசி யாத்திரை சுற்றுப்பயணத்தை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு நேற்று (ஆக. 16) ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஜெ.ஜெ நகர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கே.வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகி கே.வி.காளியப்ப கவுண்டர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆசி யாத்திரை:
அதைத்தொடர்ந்து பேருந்துநிலையம் முன்புறம் திறந்தவெளி வாகனத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா முழுவதும் மக்களிடம் ஆசி வேண்டி யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் மக்களிடம் ஆசி வேண்டி இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது 12 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களும் எட்டு மலைவாழ் மக்களும் ஒன்றிய அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சமூக நீதி காவலர் மோடி:
சமூக நீதி காக்கும் காவலராகப் பிரதமர் மோடி திகழ்கிறார். பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒன்றிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குழப்பங்களை ஏற்படுத்தின.
மக்கள் அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பை கொடுத்தது மோடி அரசு. தமிழ்நாட்டில் மட்டும் 65 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத், அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இல்லாதவரை ஒன்றிய அமைச்சராக்கிய பெருமை பிரதமர் மோடியையே சேரும். இதனை தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். நாடாளுமன்றத்தை நடத்தவேகூடாது என எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஒன்றிய அமைச்சராக செயல்பட மக்களின் ஆசி தர வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த மனு - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு