ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழ்நாடு - கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வெளிமாநில வாகனங்கள் எளிதாக நுழைகின்றன.
இன்று முதல் வெளிமாநில வாகனங்கள் நுழைய இ-பாஸ் கட்டாயம் என்பதால், பண்ணாரி சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் முகாமிட்டு, வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பண்ணாரி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் மட்டுமே வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத் துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிப்பதில் அலட்சியமாக உள்ளதால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தேர்தல் களத்தின் சூடு தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் நுழைவதற்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.