ஈரோடு:அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று(அக்.13) நள்ளிரவு கனத்த மழை கொட்டித் தீர்த்தது. அந்தியூர் பகுதியில் 10.72 சென்டிமீட்டர் மழையும், பவானியில் 7.62 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. கனத்த மழையின் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு 1767 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேறி வருகிறது.
மேலும் வழுக்குப் பாறை பகுதியிலும் கனமழை பெய்ததால் எண்ணமங்கலம் ஏரிக்கு உபரி நீர் அதிகரித்துள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும், எண்ணமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீராலும் மூலக்கடைப்பகுதியில் அந்தியூர் - பர்கூர் சாலை மூழ்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் காலை 8 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால், அந்தியூரில் இருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் சாலையைக் கடக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிக்கவில்லை.
மேலும் வெள்ளித்திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் கொட்டிய கனமழை காரணமாக இரண்டாவது நாளாக வெள்ளித்திருப்பூர், பாரதி நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.