தமிழ்நாட்டில் உழவுத் தொழிலுக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கிவரும் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த நெசவுத் தொழில் ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து முக்கியத் தொழிலாக இருந்துவருகிறது. இந்த மாவட்டங்களில் கைத்தறித் தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். நவீன விசைத்தறிகள் வருகையினால் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் போர்வை, துண்டு, ஆடை ரகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவந்தது. ஆனால், விசைத்தறியின் வருகைக்கு பின் கைத்தறித் துணி ரகங்கள் அவற்றுடன் போட்டிபோட முடியாமல் பின்வாங்கியது.
மேலும், கைத்தறி நெசவுத் தொழிலுக்கு வழங்கப்பட்டுவந்த முக்கியத்துவமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தர வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையும், கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அதேபோல், விற்பனை இல்லாததால் உரிமையாளர்களும் தங்கள் நெசவாளர்களுக்கு கூலி உயர்வை வழங்க முடியாமல் தவித்தனர். இதனால் பல நெசவாளர்கள் மாற்றுத் தொழிலைத் தேடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
ஒரு காலத்தி்ல ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலுள்ள எந்த தெருவில் நுழைந்தாலும் கைத்தறிகள் சத்தம்தான் நம்மை வரவேற்கும். ஆனால், தற்போது அந்த கைத்தறிகளின் அழுகுரலே நம் செவிகளில் விழுகிறது.
கைத்தறித் தொழிலை மட்டும் நம்பி தமிழ்நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டுவருகிறது.
ஏற்கனவே பெரும் நெருக்கடியைச் சந்தித்துவந்த கைத்தறி நெசவாளர்கள், கரோனா காலத்தில் மேலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல் இடைக்கால நிவாரணமாக ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தொடர்ந்து நூல் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆண்டுதோறும் வழங்கப்படும் கூலி உயர்வை அதிகரிக்க வேண்டும், அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை உடனடியாக வழங்கி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களை உயிரூட்ட வேண்டும உளிளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
கரோனா பரவல் தொடங்கி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை அதே நெருக்கடி நிலை நீடித்து வருவதாகவும் நிலைமை இதேபோல மோசமானால், பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலை கைவிடுவதை தவிர வேறு வழி இல்லை என்று நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தாங்கள் அனுப்பிய பொருள்கள் கோஆப்டெக்ஸில் அப்படியே தேங்கி இருப்பதால், வரும்காலத்தில் வேலை இருக்குமா என்ற அச்சமும் நெசவாளர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது.
இத்தொழிலில் ஆண்-பெண் வித்தியாசமின்றி அனைவரும் குடும்பம் குடும்பமாக பணியாற்றிவருவதால் தொன்மையான தொழிலை அழியாமல் உயிரூட்ட தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
முடிவுரையை நோக்கி கைத்தறி தொழில் - கடைசி தலைமுறையையாவது காப்பாற்றுமா அரசு? கரோனாவால் பாதிப்புக்குள்ளான நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இலவச மின்சார பயனாளிகளுக்கு மட்டும் என்பதால் நான்கில் ஒரு பகுதி கைத்தறி நெசவாளர்கள்கூட இதில் பயனடையவில்லை. எனவே, அரசு இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கரோனா கால நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு 24 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. அதேபோல, முடிவுரையை நோக்கி நகரும் கைத்தறி தொழிலின் கடைசி தலைமுறையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக உள்ளது.