குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பார்வையாளராகக் கலந்துகொண்டார்.
கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 'கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலைவசதி, குடிநீர்வசதி, சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 30 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க 2 வார காலத்தில் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளில் உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோடு 46 புதூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ சுப்பிரமணி, அரசுத் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எனப் பலர் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கூட்டம் என்ற அடிப்படையில் தங்கள் பகுதிக்குத் தேவையான, தேவையற்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது!