ஈரோடு : திரைகடல் ஓடி, திரவியம் தேடிப் பயணித்த தமிழர்கள் தாங்கள் சென்று வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் தங்களின் எச்சங்களைப் பதிக்கத் தவறவில்லை. உணவு, வழிபாடுகளில் வெளிப்பட்ட இந்த அடையாளத் தேடல், இப்போது கொண்டாட்டங்களிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
பரந்த கண்டங்களை கிராமங்களாக்கிய உலகமயமாக்கல், கொண்டாட்டங்களையும், அதன் பாரம்பரியங்களையும் பரவலாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகை கடல், கண்டங்கள் கடந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாலும் இப்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தக் கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம், தங்களின் பூர்வீகப் பாரம்பரிய கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே! இந்த கலாச்சாரக் கடத்தல்களுக்கு இதுவரை உதவியது, தமிழ் புத்தகங்கள், கோயில் விழாக்கள், பண்டிகை கொண்டாட்டங்கள். இந்த வரிசையில் இப்போது புதிதாய் இணைந்திருக்கிறது, பண்டிகை கால அலங்காரங்கள்.
நம் பாரம்பரிய கொண்டாட்டங்களில் தோரண அலங்காரங்கள் முதன்மையானது. பண்டிகைகளை வரவேற்கும் முகமாக மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தோரணங்கள். அப்படியான தோரணங்களில் மாவிலை, நெற்கதிர், மலர் தொங்கல்களுக்கும் முக்கிய இடமுண்டு. ப்ளாஸ்டிக் பூக்கள் இல்லாமல், நிஜமான பூக்களில் தோரண அலங்காரம் செய்ய ஐக்கிய அமீரகம், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் விருப்பம் அதிகரித்துள்ளது. அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முனைந்திருக்கிறது கோவையைச் சேர்ந்த பூ ஏற்றுமதி நிறுவனம் ஒன்று.
இந்த புதிய முயற்சிக்காக இரண்டு மாவட்டங்களை இணைத்திருக்கிறது அந்த நிறுவனம். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் விளையும் பூக்களை, திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப்பட்ட பூக்கட்டும் தொழிலாளர்கள் கொண்டு, அலங்காரத் தோரணங்களாக்கி அமெரிக்கா, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அந்த கோவை மலர் ஏற்றுமதி நிறுவனம்.